தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை எளிதாக்கும் அதே வேளையில், அதனை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல்களும் புற்றீசல் போல பெருகி வருகின்றன.
இதற்கு சமீபத்திய உதாரணமாக, ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபர், சினிமா நடிகைகளான பூனம் பாஜ்வா மற்றும் கிரண் ஆகியோரை நம்பி மூன்றரை கோடி ரூபாயை (இந்திய ரூபாய்) இழந்த சம்பவம் அமைந்துள்ளது. இது இணைய மோசடியின் புதிய முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த தொழிலதிபர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, "பூனம் பாஜ்வா, கிரண் போன்ற சினிமா நடிகைகளுடன் நேரலையில் பேசலாம்" என்ற விளம்பரத்தை நம்பி ஒரு டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்தார்.
விளம்பரத்தில் கூறியபடியே, அவர் குறிப்பிட்ட நடிகைகளுடன் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாததால், அவருக்கு இது நம்பகமானதாகத் தோன்றியது.
ஆனால், அவருக்குத் தெரியாமல், இந்த செயலி அவரது தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை மோசடி கும்பலுக்கு அனுப்பியது.
மோசடி கும்பல், இவரது தகவல்களைப் பயன்படுத்தி, அழகான பெண்களுடன் வீடியோ அழைப்பில் பேச வைத்து ஆசை காட்டியது.
பின்னர், இந்த அழைப்புகளை பதிவு செய்து, "இந்த வீடியோக்களை உங்கள் வட்ஸ்எப் தொடர்புகளுக்கு அனுப்பி விடுவோம்" என்று மிரட்டத் தொடங்கியது.
இவரது வட்ஸ்எப் பட்டியலில் மகள், பேரன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இருந்ததால், மானம் போய்விடுமோ என்ற பயத்தில், கும்பல் கேட்ட பணத்தை கொடுத்து வந்தார். ஆறு மாதங்களில், மொத்தம் மூன்றரை கோடி ரூபாய் இவ்வாறு பறிக்கப்பட்டது.
இந்த மிரட்டலால் தூக்கமின்றி, மன அமைதியை இழந்து நடைபிணமாக வாழ்ந்த இவர், ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து, நெருங்கிய நண்பர்களின் ஆலோசனையுடன் சைபர் கிரைம் பொலிஸாரை அணுகினார்.
அவர்களின் உதவியுடன் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டார். ஆனால், இந்த அனுபவம் அவருக்கு பெரும் பாடத்தை விட்டுச் சென்றது.
இன்றைய காலகட்டத்தில், இணையத்தில் ஏராளமான டேட்டிங் ஆப்கள் உள்ளன. இவை பெரும்பாலும் நேரடியாக பணம் வசூலிப்பதை முதன்மை வருமானமாகக் கொள்ளாமல், பயனர்களின் தனிப்பட்ட தரவுகளைத் திருடி மோசடி கும்பல்களுக்கு விற்பதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன.