தெலுங்கில் 2017இல் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ஷாலினி பாண்டே. தமிழில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வெளியான ‘100% காதல்’, ‘கொரில்லா’ படங்களில் நடித்தார்.
தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் படப்பிடிப்பில் இயக்குனர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டது பற்றி பேசியுள்ளார். அவர் கூறும்போது. ‘‘என்னுடைய திரை வாழ்க்கையில், நான் பல நல்லவர்களுடன் பணியாற்றி உள்ளேன்.அதே நேரத்தில் சில கெட்டவர்களுடனும் பணியாற்றி இருக்கிறேன். எனக்கு எந்த திரைப்பட பின்னணியும் இல்லை. ஒரு தென்னிந்தியப் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது, நான் கேரவனில் உடை மாற்றிக் கொண்டிருந்தந்தேன். அப்போது இயக்குனர் என் அனுமதி இல்லாமல் நேராக கேரவனுக்குள் வந்தார். அப்போது எனக்கு வயது 22 தான். கதவை தட்டிவிட்டாவது வந்திருக்கலாம். அவர் அப்படி செய்யவில்லை. அவர் வேண்டுமென்றே அப்படி செய்தார். இதைப் பார்த்து திகைத்துப் போனேன்.
திடீரென கோபமடைந்து, சத்தமாக இயக்குனரை வெளியேறச் சொன்னேன். என்னுடைய அலறல் சத்தம் படப்பிடிப்புத் தளம் முழுவதும் கேட்டது. அந்நேரத்தில் இயக்குனர் மிகவும் சங்கடப்பட்டார். படப்பிடிப்புத் தளத்தில் இருந்த சிலர் வந்து என்னை விசாரித்தனர். ஆனால் யாரும் எனக்கு ஆதரவு கொடுக்காமல் இயக்குனருக்கு ஆதரவு தந்தனர். மேலும் ஒரு இயக்குனரை எதிர்த்தால் நமக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் குறையும் வாய்ப்பு உள்ளது என்பதும் தெரிந்தது’’ என ஷாலினி பாண்டே கூறியுள்ளார்.